இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய நிர்வாக குழு உறுப்பினர் நல்லகண்ணு நேற்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்தியாவில் 16–வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய அரசியில் இதுவரை காங்கிரஸ் பல முறை ஆட்சி அமைத்துள்ளது. பா.ஜ.க. 6 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இதனால் இந்தியாவின் பொருளாத நிலை மிகவும் மோசமாக உள்ளது. விலைவாசி உயர்வு, அன்னிய முதலீடு, உலக மயமாக்கல் போன்ற மத்திய அரசின் தவறான கொள்கையால் இந்தியா நெருக்கடியான சூழலில் சிக்க தவிக்கிறது. இந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது.
பா.ஜ.க. மதவாத கொள்கையை அடிப்படையாக கொண்டுள்ளது. மக்கள் நலனில் அக்கறையுள்ள, பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட மாற்றுக்கொள்கைகளை உடைய, ஆட்சி மத்தியில் அமைய வேண்டும். இதுவரை எந்த ஒரு கட்சியும் பிரதம வேட்பாளர் யார் என்று அறிவித்தது இல்லை. தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், அதிக இடங்களை பெற்ற கட்சி நிர்வாகிகள் கலந்து பேசி பிரதமரை தேர்வு செய்தவார்கள். ஆனால் பா.ஜ.க. மோடியை பிரதம வேட்பாளராக அறிவித்து போட்டியிடுகிறது. இது ஜனநாயகத்திற்கு முரணானது.
3 கட்ட தேர்தல்கள் முடித்த பின்னர் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது கூட்டணியில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் ராமர்கோவிலை கட்டுவதாகவும், பொது சிவில் சட்டம் திணிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். இதனை தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. தே.மு.தி.க. ம.தி.மு.க. கட்சிகள் உள்ளன. மாற்று கொள்கைகள் உள்ள கட்சிகள் எவ்வாறு கூட்டணி வைத்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. புதுவையில் பா.ஜ.க. ஆதரவில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார். பா.ம.க.வும் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளதால் முரண்பாட்டின் மொத்த உருவாக பா.ஜ.க. உள்ளது.
கம்யூனிஸ்டு கட்சிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 18 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் அனைத்து இடங்களிலும் வெற்றியடையும் சூழல் உருவாகியுள்ளது. புதுவை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்று கடனை தள்ளுபடி செய்ய முழுவீச்சுடன் பாடுபடுவோம்.
மத்திய மந்திரி நாராயணசாமி புதுவைக்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. ஆனால் அவர் இன்று தேர்தலில் போட்டியிடுகிறார். எனவே நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மாற்றத்தை உருவாக்க மக்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் விஸ்வநாதனுக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.
- See more at: http://newsalai.com/news1/2014/04/7129.html#sthash.N9GuXBxx.dpuf
No comments:
Post a Comment