உலகிலேயே உயரமான வாக்குச்சாவடி
இதுவரை எந்த வேட்பாளரையும் பார்க்காமல் ஓட்டு போடும் மக்கள்
உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள லாஹல்-ஸ்பிடி மாவட்டத்துக்கு உட்பட்ட காசா கிராமத்திலிருந்து மலைப்பகுதியில் 19 கி.மீ. உயரத்தில் அமைந்துள்ளது ஹிக்கிம் கிராமம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 14,500 அடி உயரத்தில் உள்ள ஹிக்கிம் வாக்குசாவடிதான் உலகிலேயே உயரமான வாக்குச்சாவடி. லாங்சி, கோமிக் ஆகிய பகுதிகளும் இவ்வாக்குசாவடிக்கு உட்பட்ட கிராமங்களாகும். இந்த கிராமத்து மக்கள் இதுவரை எந்த கட்சி வேட்பாளரையும் நேரில் பார்த்ததே கிடையாதாம். 1951ம் ஆண்டு தேர்தலில் இருந்து யாருமே இந்த கிராமத்து பக்கம் எட்டிக் கூட பார்த்தது கிடையாது. இதற்கு காரணம், ஹிக்கிம் கிராமத்துக்கு செல்லும் மலைப்பாதை மிகவும் அபாயகரமானது என்பதுதான். பல்வேறு கொண்டைஊசி வளைவுகளுடன் அபாயகரமான சாலை வழியாக கோடைக்காலங்களில் மட்டுமே பயணம் செய்ய முடியும். குளிர்காலங்களில் முழுவதும் பனி படர்ந்துவிடும் என்பதால் மலை வழியாக நடந்து தான் செல்ல முடியும். மேலும், மலையை கடக்கும் போது ஆக்சிஜன் அளவும் குறையும் என்பதால் சுவாசிப்பதற்கே கடினமாக இருக்குமாம். அதனால்தான் செல்ல முடிவதில்லை என கட்சியினர் கூறுகின்றனர். ஆனாலும், இந்த கிராமமக்கள் ஒவ்வொரு தேர்தலையும் நம்பிக்கையுடனே எதிர்கொள்கிறார்கள். தவறாமல் ஓட்டு போடுகிறார்கள். கடந்த 2009 மக்களவை தேர்தலில், மாண்டி தொகுதிக்கு உட்பட்ட ஹிக்கிம் வாக்குசாவடியில் 69 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. 2013 சட்டமன்ற தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகின.இது குறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘நாங்கள் எங்கள் தொகுதி வேட்பாளரை டிவியில் மட்டும்தான் பார்த்து வருகிறோம். யாருமே எங்களை சந்தித்து எங்கள் குறைகளை தீர்த்து வைக்கவில்லை. ஆனாலும், மனம் தளராமல் ஒவ்வொரு முறையும் ஓட்டு போடுகிறோம். நாங்கள் கேட்பது எல்லாம் எங்கள் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டும் தான். மருத்துவ வசதி, தகவல் தொடர்பு வசதி, கல்வி வசதியைதான் முக்கியமாக கேட்கிறோம். ஊழியர்கள் இல்லை எனக்கூறி இங்குள்ள ஒரே மருத்துவ மையமும் 6 ஆண்டாக செயல்படுவதில்லை. அவசர காலம், மருந்து, மாத்திரை வாங்கக் கூட நாங்கள் காசா பகுதிக்கு தான் செல்ல வேண்டும். டெலிபோன் வசதி முறையாக இல்லாததால் இந்த உலகத்தில் இருந்தே துண்டிக்கப்பட்டவர்களாக கருதுகிறோம். உயர்நிலை பள்ளிகளே இல்லாததால் எங்கள் பிள்ளைகளால் மேல்படிப்பும் படிக்க முடிவதில்லை’ என்கின்றனர்.
No comments:
Post a Comment