தமிழக வாக்காளர்களுக்கு தமிழ் எழுத்தாளர்கள், இதழாளர்கள், கலைஞர்கள் வேண்டுகோள்!
இன்று (15.04.2014) மாலை 3 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை: (தமிழக வரலாற்றில் 224 கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஒன்று கூடி இப்படி ஒரே குரலில் ஒரு வேண்டுகோளை தமிழ் மக்கள் மத்தியில் ஒலித்தது சமீப காலங்களில் இதுவே முதல் முறை)
இந்து அரசு ஒன்றை அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஒரு இயக்கத்தின் முன்னணி அமைப்பாக உள்ள ஒரு கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்குத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
2002ல் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த கொடுஞ் செயலுக்குத் தலைமை தாங்கியது மட்டுமின்றி, அதற்காக இதுவரை வருத்தம் தெரிவிக்காத நரேந்திர மோடிதான் இந்த முயற்சியிலும் தலைமை ஏற்றுள்ளார். இந்த நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த கார்ப்பொரேட் நிறுவனங்கள் இதற்குப் பின்புலமாக உள்ளன. கார்போரேட் மூலதனமும் வகுப்புவாத சக்திகளும் அமைத்துள்ள இந்தக் கூட்டணி, நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்த ஆபத்தை எதிர்த்து இன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலுமுள்ள எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், இதழாளர்கள் மற்றும் கலைஞர்கள் களம் இறங்கியுள்ளனர், அவர்களின் குரலுடன் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களாகிய நாங்களும் இணைந்து கொள்கிறோம்.
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ஆதிக்கச் சாதிகளின் கூட்டணியை உருவாக்கிச் செயல்படும் ஒரு கட்சியும் இக் கூட்டணியில் இணைந்திருப்பது இந்த ஆபத்தை இரட்டிப்பாக்குகிறது. மதச் சார்பின்மையை முன் வைத்து உருவான திராவிட இயக்கத்தின் பெயரைத் தாங்கி நிற்கும் இரு கட்சிகள் மோடியை முன் நிறுத்துவதில் துணை போகின்றன.
இந்த ஆபத்து குறித்துத் தீவிரமாகச் சிந்தித்து, இதைத் தடுப்பதற்கான எல்லவிதமான செயற்பாடுகளையும் மேற்கொண்டு, நமது மதச் சார்பற்ற ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமென பொறுப்புள்ள குடிமக்களையும், அமைப்புக்களையும் நாங்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். பா.ஜ.கவால் தலைமைத் தாங்கப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக வாக்களித்து, ஆட்சியைக் கைப்பற்ற முனையும் இந்தக் கார்பொரேட் - மதவாத - சாதிய சக்திகளின் முயற்சியை வீழ்த்துமாறு தமிழக வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறோம். மதச் சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஆதரித்து வாக்களிக்க வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment