வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்திகளாக இடதுசாரிகள் இருப்பர்: டி.ராஜா
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் போட்டியிடும் இடதுசாரிக் கட்சியினர் வெற்றி- தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பர் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் து. ராஜா.
திருவாரூரில் சனிக்கிழமை இன்று செய்தியாளர்களிடம் அவர் அளித்தப் பேட்டி:
கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள்கை மக்கள் விரோதக்கொள்கையாகும். இதனால் நாட்டின் முன்னேற்றம் தடை ப்பட்டுள்ளது. இந்தியாவின் இயற்கை வளம் கொள்ளையடிப்பது, செல்வவளம் சுரண்டப்படுவது காங்கிரசின் தவறான கொள்கையே காரணம்.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கொள்ளை லாபம் பார்க்கும் நிலை உருவாக்கப் பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரிதுள்ளது. போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கவில்லை. இந்தியா முழுவதும் ஒரு சமூக ரீதியான பதட்டம் ஏற்பட்டுள்ளது. உழைக்கும் மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டியது அவசியம்.
அமைப்பு ரீதியான மற்றும் அமைப்பு ரீதியாக இல்லாத தொழிலாளர்களின் உரிமைகள் ஒருங்கிணைந்து பாதுகாக்க சட்டம் இல்லை. கொள்கை மாற்றம் ஒன்றே இந்த நிலையைப் போக்கும் தாரக மந்திரமக உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. சுதந்திர இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஊழலும், கொள்ளையும் அதிகரித்துவிட்டன. அகில இந்திய அள வில் காங்கிரஸ் கட்சி அகற்றப்பட வேண்டிய ஒன்றாகிவிட்டது. ஊழல் மலிந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கும், அக்கட்சியின் பொருளாதாரக் கொள்கையை பின்பற்றும் மதவாதக் கொள்கை கொண்ட பாஜகவுக்கும் பெரிதாக வித்தியாசமில்லை.
நரேந்திர மோடியின் மாயாஜாலத்தை நம்பி தமிழகத்தில் கட்சிகள் அணி சேர்ந்துள்ளன . திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் மோடியின் அரசியல் குறித்து பேசுகின்றனவே தவிர அவரது மற்றும் பாஜவின் மதவாதக் கொள்கை குறித்து பகிரங்கமாக விமர்சிக்க மறுக்கின்றன.
தமிழகத்தில் பாஜக செல்வாக்கு மிகுந்துவிட்டதைப் போன்ற பாவனையில் அது பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசி வருவது நகைப்பை அளிக்கிறது. மீனவர்களுக்கு தனி அமைச்சகம் என்ற இடதுசாரிகளின் நீண்ட கால கோரிக்கையை தற்போது தனது வாக்குறுதியாக பாஜக முன்வைப்பதும் அந்த வகையில் தான் அடங்கும்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் காங்கிரசின் நிலைப்பாடும், பாஜவின் நிலைப்பாடும் ஒன்றுதான். அதேபோல் இந்திய பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கையில் இரு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளன. மாற்றுக் கொள்கை கொண்ட அரசியல் மாற்றம் ஒன்றை உருவாக்குவதே இடதுசாரிகளின் நோக்கம்.
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் போட்டியிடும் 18 தொகுதிகளில் வெற்றி, தோல்வி களை தீர்மானிக்கும் சக்திகளாக இடதுசாரிகள் இருக்கும். வருங்காலத்தில் தமிழகத்தில் இடதுசாரி அமைப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார் ராஜா.
பேட்டியின் போது மாவட்டச் செயலர் வெ. வீரசேனன் (இந்திய கம்யூனிட்டு), ஐ.வி. நாகராஜன் (மார்க்சிஸ்ட் கட்சி) மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த வை. செல்வராஜ், மாசிலாமணி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment