பசுமை வீடு என்னாச்சு என கொதிப்பு
கிராமத்தினர் கேள்வி பன்னீர்செல்வம் ஓட்டம்
தேனி: தேனி அருகே நடந்த பிரசாரத்தில், ‘பசுமை வீடு என்னாச்சு‘ என்று கிராமத்தினர் கேட்டதால் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஓட்டம் பிடித்தார். தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த பெண்கள் மத்தியில் அமைச்சருக்கு எதிராக திடீரென்று கோஷம் எழுந்தது. உடனே, பன்னீர்செல்வம் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார். சிறிது நேரத்தில் அனைவரும் ஒன்று திரண்டு பன்னீர்செல்வத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.பின்னர், ‘பசுமை வீட்டு கட்டித்தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் வரை வசூலித்தனர். இதுவரை வீடுகள் கட்டித்தரவில்லை. எங்களை அதிமுகவினர் ஏமாற்றி விட்டனர். எனவே, வரும் தேர்தலில் எங்கள் கிராமத்தை சேர்ந்த யாரும் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம்‘ என்று ஆவேசமாக தெரிவித்தனர். இதுகுறித்து, அப்பகுதி பெண்களிடம் கேட்டபோது, ‘பிரசாரத்தின்போதே அமைச்சருடன் வாக்குவாதம் செய்ய இருந்தோம். இந்த விபரத்தை முன்கூட்டியே அறிந்த போலீசார் அமைச்சர் பிரசாரம் செய்யும் வரை அமைதியாக இருங்கள். இல்லாவிட்டால் உங்களை கைது செய்வோம் என மிரட்டினர். இதனால் எங்களால் அமைச்சர் முன்னிலையில் எதிர்ப்பை காட்ட முடியவில்லை‘ என்றனர்.ஏற்கனவே போடி அருகே கரட்டுப்பட்டியில் அமைச்சரை ஊருக்குள் நுழைய விடா மல் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.இது போல் கடந்த 9 ம் தேதி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பன்னீர்செல்வம் வேன் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாரம் செய்ய ஊருக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.