சாகித்ய அகாடமி நிர்வாக குழு 23–ந்தேதி அவசரமாக கூடுகிறது
மேலும் 6 எழுத்தாளர்கள் விருதை ஒப்படைக்க முடிவு:
புதுடெல்லி
15 எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்துள்ளதால், இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க சாகித்ய அகாடமி நிர்வாகிகள் குழுவின் அவசர கூட்டம் 23–ந்தேதி நடக்கிறது. மேலும் 6 எழுத்தாளர்கள் விருதுகளை ஒப்படைக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
சாகித்ய அகாடமி விருதுகள்
கர்நாடக மாநிலத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற பகுத்தறிவு எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சமீபத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது எழுத்தாளர்கள் மத்தியிலும், சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகிறார்கள். நாட்டில் மத ரீதியான மோதல்கள் அதிகரித்து இருப்பதாலும், சகிப்புத்தன்மை குறைந்து வருவதாலும், கல்புர்கி படுகொலையில் சாகித்ய அகாடமி மவுனமாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விருதுகளை ஒப்படைப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
15 எழுத்தாளர்கள்
இதுவரை 15 எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்துள்ளனர். நேற்று மேலும் 6 எழுத்தாளர்கள் விருதுகளை ஒப்படைக்க முடிவு செய்தனர். காஷ்மீர் எழுத்தாளர் குலாம்நபி காயல், கன்னட எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீநாத், ராஜேஷ் ஜோஷி, இந்தி எழுத்தாளர் மங்களேஷ் டப்ரால், வார்யம் சாந்து, ஜி.என்.ரங்கநாதராவ் ஆகியோர் இந்த முடிவை எடுத்தனர்.
இதில் மங்களேஷ் டப்ரால், ராஜேஷ் ஜோஷி, ஸ்ரீநாத் ஆகியோர் நேற்றே தங்கள் விருதுகளை ஒப்படைத்துவிட்டனர். மற்றவர்கள் தங்கள் முடிவை சாகித்ய அகாடமிக்கு தெரிவித்துள்ளனர். மும்பையை சேர்ந்த உருது எழுத்தாளர் ரஹ்மான் அப்பாஸ், குஜராத்தை சேர்ந்த பிரபல கவிஞர் அனில்ஜோஷி ஆகியோரும் நேற்று தங்கள் சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைத்தனர்.
பேனா–துப்பாக்கி குண்டு
குலாம்நபி காயல் கூறும்போது, ‘‘நாட்டில் உள்ள சிறுபான்மையினர் பாதுகாப்பற்றவர்களாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் உணர்கிறார்கள். பேனா இருக்க வேண்டிய இடத்தில், இப்போது துப்பாக்கி குண்டுகள் பாய்கிறது’’ என்றார்.
எழுத்தாளர்கள் டப்ரால், ஜோஷி ஆகியோர் கூறும்போது, ‘‘கல்புர்கி படுகொலைக்கு சாகித்ய அகாடமி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நாட்டில் இப்போதுள்ள சூழ்நிலைக்கு கண்டனம் தெரிவிப்பது அகாடமியின் கடமை’’ என்றனர். ஜோஷி உள்பட சிலர் விருதுடன், தங்கள் பரிசு தொகையையும் திருப்பி அனுப்பியதாக கூறியுள்ளனர்.
அதோடு அகாடமியின் நிர்வாகிகள் குழு இந்த பரிசுத்தொகையை என்ன செய்வது? என்பது குறித்து இப்போதே ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
23–ந்தேதி அவசர கூட்டம்
எழுத்தாளர்கள் தொடர்ந்து தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருவதால் சாகித்ய அகாடமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் சாகித்ய அகாடமியின் நிர்வாகிகள் குழுவின் அவசர கூட்டம் 23–ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்துவருவதால், இந்த பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்த அவசர கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டாலும், அகாடமியின் பெரும்பாலான நிர்வாகிகள் தற்போது டெல்லிக்கு வெளியே இருப்பதால் 23–ந்தேதி கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அகாடமியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment