ஆரவாரச் சென்னை
இன்று அலங்கோலமாகியது.
சிங்காரச் சென்னை
இன்று சீர்கேட்டின் உச்சம்.
இயற்கை தன் வெப்பத்தை
சீற்றத்தால் தணித்துக் கொண்டது.
தானுண்டு தன் வேலையுண்டு
என்றிருந்தவர்கள்
இன்று தள்ளாடிப் போனார்கள்.
கூவம் சுத்தமாச்சு என்ற மகிழ்ச்சி
நிலையாமல் போனது.
இன்று ஊரே கூவமானது.
தாழ்ந்த, உயர்ந்த என்று
ஒரு பகுதியோ, மக்களோ
இன்று சென்னையில் இல்லை.
எல்லோரும் ஓர் நிறை என்றாச்சு.
ஊடகச் செய்திகள் நெஞ்சை
உறைய வைக்கின்றது.
பத்தடி உயரத்தில் கடல் அலை
பாய்ந்ததை பார்த்திருக்கிறோம்!
பத்தடிக்கும் மேலே
நமது வீடுகள் நீரால் நிறைந்ததே.
என்ன ஒரு கொடுமை!
இந்த மழை இன்னும் நாலு நாளாம்!!
பம்பரமாய்ச் சுழன்றவர்கள்
இன்று பம்மி, பதுங்கி பரிதவித்து.
ஏனிந்த வேதனை!
இந்த ஆராய்ச்சி இப்போது வேண்டாம்.
நமது உறவுகளை, நட்புக்களை
களங்கமில்லா உயிர்களை
காத்திட களம் புகுவோம்.
நெருக்கடி சூழல் உருவாகும்போதுதான்
உதவும் உள்ளங்களை அறிய முடிகிறது.
பள்ளிகள், கல்லூரிகள்,
அனைத்து மத ஆலயங்கள்,
திரையரங்குகள், நிறுவனங்கள்
காட்டும் அக்கறை
கனிந்துருகச் செய்கிறது.
ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள்
ஏற்றிடும் உழைப்புக்கு
ஆற்றிடும் தொண்டுக்கு
இருகரம் கூப்புவோம்.
அண்டை மாநிலங்களும்,
திரைத்துறை நடிகர்களும்
ஊடகவியலாளர்களும்
காலத்தில் செய்யும் உதவிகளை
கணக்குப் பார்த்திட வேண்டா!
உதவி செய்யும் உள்ளங்களை
உளமார வாழ்த்திடுவோம்.
உயிர், உடமைகளை
இழந்து வாடும்
நண்பர்களே, உறவுகளே!
இந்த நிலை எளிதில் மாறும்!
இனிதாகவும் மாறும்!.
கவலை வேண்டாம்!
அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
No comments:
Post a Comment