முந்தைய அரசு கடைப்பிடித்த வெளியுறவுக் கொள்கையை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் வழக்கத்தை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் தொடரக் கூடாது என்று மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி. ராஜா யோசனை தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் டி. ராஜா புதன்கிழமை பேசியது:
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தபோது இடதுசாரி கட்சிகளின் கடுமையான ஆட்சேபத்துக்கு இடையிலும் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
அதுபோல, முந்தைய அரசு கண்ணை மூடிக் கொண்டு கடைப்பிடித்த கொள்கையைத்தான் நரேந்திர மோடி அரசும் பின்பற்றப் போகிறதா, இல்லை தன்னிச்சையாக நாட்டு நலன் கருதி முடிவு எடுக்குமா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழகத்துடன் தொடர்புடைய இரு விவகாரங்களிலும் இதே கேள்விகள் எழுகின்றன. கச்சத்தீவு இலங்கைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தாரை வார்க்கப்பட்டது. அதை மீட்கவும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முந்தைய அரசிடம் நான் தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது யதார்த்தத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, அது வழி வழியாகப் பின்பற்றக் கூடியதாக இருக்கக் கூடாது. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மென்மையான வெளியுறவுக் கொள்கையை முந்தைய மத்திய அரசு கடைப்பிடித்தது. அதுபோல, கண்ணை மூடிக் கொண்டு முந்தைய அரசின் வெளியுறவுக் கொள்கையை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் பின்பற்றக் கூடாது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்தின் நலனை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தமிழகம், கர்நாடக அரசுகளை மத்திய அரசு அழைத்துப் பேசி பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்' என்றார் டி.ராஜா.
No comments:
Post a Comment