சிபிஐ நீதிமன்றத்தில் மே 26-ல் ஆஜராக தயாளு, கனிமொழி, ராசாவுக்கு சம்மன்
திமுக தலைவர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் 26-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பி்த்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த ஊழலில் கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தன் கிளை நிறுவனங்கள் வழியாக ரூ.200 கோடி லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த பணப் பரிமாற்றம் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வருவதால், அமலாக்கப் பிரிவு தனியாக வழக்குப் பதிவு செய்து, சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்பு, கடந்தவாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி, தயாளு அம்மாள், கருணாநிதி உறவினர் அமிர்தம், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா, குசேகான் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால், பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகிய 10 பேர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளனர்.
இதுதவிர, ஸ்வான் டெலிகாம், கலைஞர் டிவி, சினியுக் மீடியா, டிபி ரியால்டி உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு நீதிபதி சைனி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அமலாக்கப்பிரிவு இணை இயக்குநர் இந்தப் புகாரை பதிவு செய்துள்ளார். குற்றச்சாட்டு குறித்த விசாரணை விவரங்கள், விசாரணை யின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்கள், இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள் ளன. புகார் அளித்திருப்பவர் பொது ஊழியர் என்பதால், அவரிடம் வாக்கு மூலம் பெறத் தேவையில்லை. ஆவணங்களை பரிசீலித்ததில், குற்றச் சாட்டு குறித்து வழக்கு விசாரணையை தொடர போதிய ஆதாரங்கள் உள்ளது தெரியவருகிறது. தாக்கல் செய்யப் பட்டுள்ள ஆவணங்கள் திருப்தி அளிக்கின்றன. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ள அனைவரும் வரும் 26-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. புகார் அளித்த அமலாக்கப்பிரிவு அதிகாரி தினமும் வழக்கு விசாரணை யில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment