scroll

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி - பட்டுக்கோட்டை வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஆடுகளைத்தான்கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல;ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின். -அம்பேத்கர்

Thursday, 12 June 2014



முந்தைய அரசு கடைப்பிடித்த வெளியுறவுக் கொள்கையை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் வழக்கத்தை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் தொடரக் கூடாது என்று மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி. ராஜா யோசனை தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் டி. ராஜா புதன்கிழமை பேசியது:
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தபோது இடதுசாரி கட்சிகளின் கடுமையான ஆட்சேபத்துக்கு இடையிலும் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
அதுபோல, முந்தைய அரசு கண்ணை மூடிக் கொண்டு கடைப்பிடித்த கொள்கையைத்தான் நரேந்திர மோடி அரசும் பின்பற்றப் போகிறதா, இல்லை தன்னிச்சையாக நாட்டு நலன் கருதி முடிவு எடுக்குமா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழகத்துடன் தொடர்புடைய இரு விவகாரங்களிலும் இதே கேள்விகள் எழுகின்றன. கச்சத்தீவு இலங்கைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தாரை வார்க்கப்பட்டது. அதை மீட்கவும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முந்தைய அரசிடம் நான் தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது யதார்த்தத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, அது வழி வழியாகப் பின்பற்றக் கூடியதாக இருக்கக் கூடாது. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மென்மையான வெளியுறவுக் கொள்கையை முந்தைய மத்திய அரசு கடைப்பிடித்தது. அதுபோல, கண்ணை மூடிக் கொண்டு முந்தைய அரசின் வெளியுறவுக் கொள்கையை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் பின்பற்றக் கூடாது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்தின் நலனை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தமிழகம், கர்நாடக அரசுகளை மத்திய அரசு அழைத்துப் பேசி பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்' என்றார் டி.ராஜா.

Saturday, 7 June 2014

 உன் விலை என்ன?

நோட்டா சொல்வது என்ன?
கேட்கச் சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனாலும் இது நேரடியாக உணர்ந்த உண்மை. அப்போது 49 ஓ, நோட்டா என்கிற நவீன தேர்தல் மறுப்பு வடிவங்களெல்லாம் வரவில்லை. இப்போது முன் னேற்றம். நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் தமிழகத் தில் மட்டும் 5.5 லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித் திருக்கிறார்கள். அதாவது 1.4%. புதுவையில் 3%. அகில இந்திய அளவில்1.1% - சுமார் 59 லட்சம் பேர். இது தவிர, வாக்களிக்காமலே இருந்துவிட்டவர்கள் சில கோடிப் பேர். இந்த விதமான புறக்கணிப்பு மனோபாவம் ஏன் வளர்ந்துவருகிறது என்று எந்த அரசியல் கட்சியாவது சுயபரிசீலனை செய்திருக்கிறதா?
இப்படி இருந்தாலும், எதை அளவுகோலாக வைத்துக் கொண்டு தங்களுக்கான பிரதிநிதிகளை வாக்காளப் பெருமக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு தொண்டுநிறுவனம் கொடுத்திருக்கிற கணக்கு வியக்கவைக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி-க்களில் மூன்றில் ஒருவர் மீது குற்ற வழக்குகள் இருக்கின்றன. பா.ஜ.க., காங்கிரஸ், சிவசேனா, அ.தி.மு.க. என்று பல கட்சிகளும் இதில் அடக்கம். மொத்த எம்.பி-க்களில் 442 பேர் கோடீஸ்வரர்கள் (அவர்கள் காட்டியுள்ள குறைந்தபட்ச சொத்துக் கணக்குப்படி).

பலங்கள் தேவை
இதன்படி வாக்காளர்கள் என்ன அளவுகோலின்படி வாக்களிக்கிறார்கள் என்பதைவிட, வேட்பாளர்கள் என்னென்ன தகுதிகளின் அடிப்படையில் இங்கு போட்டியிடுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. குற்றப் பின்னணி, அடியாள் பலம், தேர்தல் செலவுக்கான பணபலம், பணப் பட்டுவாடாவுக்கான தனிபலம், இவற்றைத் தவிர, விளம்பரப்படுத்திக்கொள்வதற்கான பலம் - எல்லாம் சேர்ந்தால்தான் இப்போது வேட்பா ளராகப் போட்டியிட்டு வெற்றிபெற முடிகிறது.

நேர்மையாளர்களுக்குத் தண்டனை
சின்ன ஃப்ளாஷ்பேக் பார்க்கலாமா? நேர்மையான, எளிமையான, ஜனநாயகத்தில் உண்மையான நம்பிக்கை கொண்ட, சொத்து சேர்க்காத அரசியல்வாதியான காமராஜர் 1967-ல் விருதுநகரில் மாணவர் தலைவரான சீனிவாசனைவிட 1,285 வாக்குகள் குறைவாகப் பெற்றுத் தோல்வியடைந்தபோது சொன்னார்: ‘‘மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். நாம் அமைதி காப்போம்.’’
எளிமைக்குப் பெயர்போன இன்னொரு தலைவரான கக்கன் 1967 தேர்தலில் மேலூரில் ஓ.பி. ராமனிடம் தோற்றுப்போனார். பிறகு, 1971-ல் பெரும்புதூரில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட்டபோது அங்கும் தோற்கடிக்கப்பட்டார்.
கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி 1977-ல் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி யடைந்தார். சிறந்த நாடாளுமன்றவாதி என்று பெயரெடுத்த இரா. செழியன் 1984-ல் தென்சென்னையில் தி.மு.க. ஆதரவுடன் ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் நடிகை வைஜயந்தி மாலாவிடம் தோற்றுப்போனார்.
தற்போது வாழும் அரசியல்வாதிகளில் நேர்மைக்கு உதாரணமாகச் சொல்லப்படும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு தனது போராட்டங்களுக்காகப் பல முறை சிறை சென்றவர்; ஆற்று மணலை எடுப் பதை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தியிருப்பவர். அவர் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி யிட்டபோது அவருக்கு வெற்றி கிடைக்க வில்லை.
தமிழகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளான முல்லைப் பெரியாறு அணை, ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் என்று பலவற்றுக்காகவும் போராடிய வைகோ இலங்கைப் பிரச்சினைக்காக 19 மாதங்கள் பொடா சிறையில் இருந்தவர். இருந்தபோதும் 2004-ல் காங்கிரஸ் வேட்பாளரான மாணிக் தாகூரிடம் தோற்ற வைகோ, நடந்துமுடிந்த தேர்தலில் அதே விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரிடம் தோற்றிருக்கிறார்.
அணுசக்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டி ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட சுப. உதயகுமாருக்குக் கிடைத்த வாக்குகள் 15,314 மட்டுமே.

எந்த அடிப்படையில் வாக்களிக்கிறார்கள்?
தமிழகத்தின் மீது அசலான அக்கறையுடன், தன்னுடைய குறைந்தபட்ச நேர்மையை மட்டும் முன்னிறுத்தி தேர்தலில் நின்ற பல வேட்பாளர்களுக்குத் தமிழகம் தந்திருக்கிற எதிர்வினை இதுதான். காம ராஜர், கக்கனில் துவங்கி வைகோ வரை நீள்கிற இந்த விதமான எதிர்வினைகள், தமிழக அரசியலில் சற்று ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழாதா என்று எதிர்பார்த்திருந்தவர்களைச் சலிப்பில் ஆழ்த்தியிருக் கின்றன. கருத்துக் கணிப்பாளர்களையும் கூடக் குழப்பியிருக்கின்றன.
ஏற்கெனவே, தேர்தல் ஜனநாயக முறையில் நம்பிக்கை இழந்த நிலையில், நோட்டாவுக்கு வாக்களிப் பவர்களும், வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்காமல் இருப்பவர்களும் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் - பலரிடம் எழக்கூடிய இயல்பான கேள்வி.

‘‘எந்த அடிப்படையில் இங்கு மக்கள் வாக்களிக்கிறார்கள்?வாக்காளர்களின் தகுதியும் நேர்மையும், அவர் கடந்து வந்திருக்கிற வாழ்க்கையும்கூட இங்கு ஒரு பொருட்டில்லையா? வேட்பாளர்களின் தகுதியைப் புறம்தள்ளி அவர் மீதிருக் கும் குற்றப் பின்னணி, வழக்கு இத் யாதிகள், சாதியம் அல்லது மதம் சார்ந்த ஆதிக்கம் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், அவர்களுடைய உளவியலை எப்படிப் புரிந்து கொள்வது? தேசிய அளவிலும் மாநில அளவிலும் வெவ்வேறு ஊழல் வழக்குகளில் பிணைக்கப் பட்டிருப்பவர்களின் பின்னணி இங்கு அநாவசியமான ஒன்றா? தொடர்ச்சியான இலவசங்கள், கவர்ச்சியாகக் கட்டமைக்கப்படும் விளம்பரங்கள், இறுதி நேரத்துப் பட்டுவாடாக்கள்தான் படிப்படியாக வாக்காள மனங்களை நகர்த்தி வாக்குப்பதிவு இயந்திரத்திடம் கொண்டுசேர்க்கின்றனவா?’’
இதைப் படிக்கும் உங்களுடைய மனதில்கூட இதே கேள்விகள் வேறு வடிவில் தோன்றியிருக்கலாம். நெருக்கடி நிலையை அடுத்து நடந்த தேர்தலைத் தவிர்த்து, அனுதாபம், பணபலம், மதம், சாதி உணர்வு கள்தான் வாக்களிப்பதைத் தீர்மானிக்கும் என்றால், ஜனநாயகத்தை அர்த்தமிழக்க வைப்பது யார்?


Thursday, 5 June 2014

தனியார் மயமாகிறது ரயில்வே?: ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா 


ரயில்வே துறையை தனியார் மயமாக்க வேண்டிய தருணம் 
தற்போது வந்துள்ளது என்று டெல்லியில் செய்தியாளர்களை 
சந்தித்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். ரயில்வே துறையை மேம்படுத்த அதிக அளவு நிதி தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். ரயில்வே மேம்பாட்டுக்கு அன்னிய நேரடி முதலீடு அவசியம் என்றும் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.  

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் விரைவில் பணிநிரந்தரம் 
நெய்வேலி : என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள், வரும் ஜூன் மாதம் முதல் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் நடைபெறுவதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நல ஆணையர், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் என். எல், சி. நிர்வாகம் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தோழர் உமாநாத் மறைவிற்ககு... 
நமது கண்ணீர் அஞ்சலி...

 
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினருமான தோழர். ஆர்.உமாநாத் இன்று (21-05-2014) காலை திருச்சி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 93.

தோழர் உமாநாத் கேரளா மாநிலம் காசர்கோடு என்ற இடத்தில் 1921 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி பிறந்தார். தந்தை பெயர் ராமநாத் ஷெனாய். தாய் நேத்ராவதி. பிராமண குடும்பத்தில் பிறந்த இவருக்கு 5 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர்.

மார்க்சிஸ்ட் மாநில உறுப்பினர் யு.வாசுகி, நிர்மலா ராணி மற்றும் லக்‌ஷ்மி ஆகியோர் இவரது மகள்கள் ஆவர்.

தோழர். உமாநாத் சிறு வயதிலேயே 1930-ல் நடந்த அந்நிய துணி எரிப்பு போராட்டத்தில் பங்கேற்றவர். கல்லூரியில் பயின்றபோது வேலையின்மைக்கு எதிராக கண்ணனூர் முதல் சென்னை கோட்டை வரை நடந்த பட்டினி பாதயாத்திரையில் பங்கேற்றார்.
கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் 1940 ஆம் ஆண்டு தன்னை கட்சியின் முழுநேர ஊழியராக இணைத்துக்கொண்டு தலைமறைவாக இருந்து கட்சி பணிகளை மேற்கொண்டார்.

பிரிட்டிஷ் ஆட்சியை வன்முறை மூலம் தூக்கி எறிய சதி செய்ததாக கைது செய்யப்பட்டு, சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். 9 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். 7 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்திய உமாநாத், பல போராட்டங்கள், உண்ணாவிரதத்திற்கு தலைமை வகித்துள்ளார்.

தோழர். உமாநாத் நடத்திய உண்ணாவிரத போராட்டங்கள் மிகவும் பிரபலமானவை. பெரும் வெற்றிகளை ஈட்டியவை. 2 வாரம், 3 வாரம், 4 வாரம் என்று அவர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். உயிர் போகும் நிலைவரினும் கோரிக்கைகள் நிறைவேறாமல் அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றதே இல்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை குத்தகை விவசாயிகளுக்கு பெற்றுத் தந்ததில் உமாநாத் பங்கு மகத்தானதாகும்.

7 வருடங்கள் 10 மாதங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 7 வருடங்கள் 2 மாதங்கள் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். உமாநாத் சோவியத் யூனியன், மக்கள் சீனம், நிமேனியா, பல்கேரியா, ஆஸ்திரேலியா, ரோமாபுரி, யூகோஸ்லேவியா ஆகிய நாடுகளுக்கு சென்றவர். கட்சி உறுப்பினராக தொடங்கி அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக தன்னை உயர்த்திக் கொண்டவர்.

இவர் 1952 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் நாள் பொன்மலை தியாகிகள் திடலில் சடங்குகள் இன்றி திருமணம் செய்துகொண்டார். உமாநாத் வாழ்க்கையில் தோழர் பாப்பா உமாநாத்தின் பங்கு மகத்தானது. மனைவியாக, நல்ல தோழராக, சக போராளியாக வாழந்திருக்கிறார்.

1962-ல் புதுக்கோட்டை நாடாளுமன்ற தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மரண தண்டனை கூடாது என்பதை வலியுறுத்தி தனது முதல் கன்னிப் பேச்சை நாடாளுமன்றத்தில் பேசியவர். சிஐடியு மாநில பொதுச் செயலாளராகவும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இரு தடவை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தோழர் உமாநாத் இந்திய நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் உழைப்பாளிகளின் உரிமைக்களுக்காக சிம்ம கர்ஜனை செய்தவர். பல தொழிலாளர் நலச்சட்டங்கள் உருவாவதற்கு வித்திட்டவர். பல தொழிலாளர் நலச்சட்டங்கள் உருவாவதற்கு இவரது போராட்டங்கள் உதவின.

ஆலைப் பிரச்சினை முதல் உலக பிரச்சினை வரை பொதுமக்களுக்கு புரியும் வகையில் பேசி புரிய வைப்பதில் உமாநாத் நிகரற்றவர். தமிழ்நாட்டில் உழைக்கும் பெண்கள் இயக்கத்தை சிஐடியு மூலம் உருவாக்கியே தீரவேண்டும் என்று உமாநாத் உறுதியாக நின்றார். பெண்களிடம் உள்ள அறியாமையையும், மூடநம்பிக்கைகளையும் விரட்டி அவர்கள் பாரதி பாடியதுபோல் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் நிமிர்ந்த ஞானச்செருக்கும் கொண்டவர்களாக பெண்ணுரிமைக்காக போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர் தோழர். உமாநாத்.

உ.பி. தலித் சிறுமிகள் பலாத்காரம்: ஐ.நா. கடும் கண்டனம்

பதானில் நடந்த பலாத்கார சம்பவத்தை அடுத்து, லக்னோவில் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக நடத்திய போராட்டம்.|படம்: பிடிஐ.
உத்தர பிரதேசத்தில் தலித் சிறுமிகள் இருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு கடுமையாகக் கண்டித்துள்ளது.
மேலும், கொடூரமான குற்றத்தை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. தலைவர் பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் ஜார்ஜ் அளித்த பேட்டியில், "இந்தியாவில் தலித் சிறுமிகள் 2 பேர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, மரத்தில் தொங்கவிட்டு கொலை செய்தது மிகவும் கொடூரமானது.
இதுபோன்ற கொடூர சம்பவங்கள் பாகிஸ்தான், இந்தியா, நைஜீரியா போன்ற நாடுகளில் நடைபெறுவது வார்த்தையால் சொல்ல முடியாத அளவில் உள்ளது. அது மிகவும் கொடூரமானது.
உலகின் பாதி மக்கள் தொகையை பெற்றுள்ள நாடுகளில், பெண்களுக்கு எதிராக கூற முடியாத வன்முறைகள் நடைபெறுகிறது. பெண்கள் இடையே பாரபட்சம் மற்றும் விதி மீறல்கள் நடைபெறும் நிலையில், உலகின் எல்லா இடங்களிலும் அமைதியையும் முன்னேற்றத்தையும் காண முடியாது.

ஆபத்தான அறிவிப்புகளை வெளியிடுகிறது மத்திய அரசு: தா.பாண்டியன்

   
·        
நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் குற்றம் சாட்டினார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு தா.பாண்டியன் அளித்த பேட்டி:
மத்தியில் புதிதாகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, பாதுகாப்புத் துறையில் 100 சதவீத அளவிற்கு அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத உற்பத்தியாளர்களின் நோக்கம் வியாபாரம் மட்டுமே. தங்களது வியாபாரத்தை அதிகரிக்க முதலில் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வர். பின்னர், தீவிரவாதிகளை அடக்க அரசுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வர்.  உலகின் ஏதாவது ஒரு பகுதியில் சண்டை நடந்து கொண்டிருந்தால் மட்டுமே ஆயுத உற்பத்தியாளர்களுக்கு வியாபாரம் நடக்கும்.
இதுவரை பயங்கரவாதிகளுக்கு உள்நாட்டில் ஆயுதங்கள் கிடைக்காமல் இருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தற்போது தீவிரவாதிகளுக்கு உள்நாட்டிலேயே ஆயுதம் கிடைக்க வழிவகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் அல்ல என்று மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்துள்ளார். ஆனால், அவரது உறவினரும், விடுதலைப் போராட்ட வீரருமான அபுல்கலாம் ஆசாத், இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் அந்தஸ்தைப் பெறுவதற்காகப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்ற அறிவிப்புகள் நாட்டில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை.
உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் தலித் பெண்கள் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, தலித் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தலித் மக்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அனைத்துத் தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டும்.
கோவைக்கு குடிநீர் ஆதாரமாகத் திகழும் சிறுவாணி அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

ராணுவத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் தீர்மானம்

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு தளவாட உற்பத்திதுறையில் 100% அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 29, 30 தேதிகளில் சென்னை சிந்தாதிரி பேட்டையிலுள்ள ஏ.ஐ.டி.யு.சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, மாநில துணைச் செயலாளர்கள் சி.மகேந்திரன், கோ.பழனிச்சாமி, செயற்குழு உறுப்பினர்கள் எம்.அப்பாத்துரை, பி.சேதுராமன், மு.வீரபாண்டியன், பி.பத்மாவதி, டி.எம்.மூர்த்தி, ஆர்.முத்தரசன், ஆகியோர் கலந்து கொண்டனார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: "இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு தளவாட உற்பத்திதுறையில் 100% அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவுகளை வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி தருகிறது. விடுதலைக்கு பின் அமைந்த ராணுவத்தின் தேவைகள் அனைத்தும் பாதுகாப்பு கருதி ராணுவத்தின் கண்காணிப்பிலேயே நிறைவு செய்யப்பட்டது. தனியாருக்கு எந்த அனுமதியும் வழங்கபடவில்லை.
இந்த பின்புலத்திலிருந்து, இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க அரசு, ராணுவத்தில் நூறு சதவீத அந்நிய முதலீட்டை ஊக்குவிப்போம் என்பது பெரும் அதிர்ச்சியை தருவதாக அமைந்துள்ளது. அந்நிய முதலீட்டில் ராணுவம் இயங்குமானால் ரகசியங்கள் எவ்வாறு காப்பாற்றப்படும் என்ற அடிப்படையான கேள்வி எழுகிறது.
இந்திய பாதுகாப்பு கடும் நெருக்கடிக்குள் சிக்கி விடும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். உடனடியாக தேச நலன் கருதி இந்த முடிவை மாற்ற வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் குறைபாடுகளை முன்நிறுத்தி தேர்தலில் வெற்றிப் பெற்ற பா.ஜ.க இதே கொள்கையை, ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே செய்யத்தொடங்கிவிட்டது.
பெட்ரோல், டீசல், கேஸ், விலை முந்தைய அரசின் கொள்கைபடியே, சந்தை நிலவரத்திற்கேற்ப முதலாளிகளே உயர்த்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதனால் மாதா மாதம் விலை ஏறும் அபாயம் மீண்டும் எழுந்துள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பா.ஜ.க அரசின் இந்த கொள்கையை வன்மையாக் கண்டிக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 15: இந்திய நாட்டின் விடுதலைக்காக பகத் சிங், ராஜகுரு ஆகியோரோடு தூக்கு தண்டனை மூலம் மரணத்தை தழுவிய சுக்தேவ் பிறந்த தினம் இன்று, வீரம் செறிந்த சுக்தேவின் தியாகத்தை மறவாமல் பெருமையுடன் நினைவு கூர்வோம்.

நல்லக்கண்ணுக்கு அம்பேத்கர் சுடர் விருது: ஜூன் 15-ல் விடுதலைச் சிறுத்தைகள் வழங்குகிறது

நல்லக்கண்ணு | கோப்புப் படம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படவுள்ளதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, கடந்த 2007ஆம் ஆண்டு முதல், பல்வேறு துறைகளில் தொண்டாற்றி வரும் சாதனையாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
குறிப்பாக, சமூக நீதிப் பாதுகாப்பு, சிறுபான்மையினர் நலன்கள், தாய்த்தமிழ்ப் பாதுகாப்பு மற்றும் இனநலன்கள் ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றிவரும் சான்றோரைத் தேர்வு செய்து இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்விழா ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்த நாளில் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு (2014) நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டதால் குறிப்பிட்ட நாளில் இவ்விழாவினை நடத்த இயலவில்லை. எனவே, வருகின்ற ஜூன் 15, 2014 அன்று சென்னையில் இவ்விழா நடைபெறுகிறது.
சென்னை, எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் நடைபெறவுள்ள இவ்விழா, 'புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, விருதுகள் வழங்கும் விழா மற்றும் அயோத்திதாசப் பண்டிதரின் நூற்றாண்டு நினைவு நாள்' என முப்பெரும் விழாவாக ஒருங்கிணைக்கப்படுகிறது.
விழாவில் விருது பெறும் சான்றோர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணிப் பொறுப்பாளர்கள் உரையாற்றுகின்றனர்.

சிபிஐ நீதிமன்றத்தில் மே 26-ல் ஆஜராக தயாளு, கனிமொழி, ராசாவுக்கு சம்மன்

தயாளு அம்மாள், கனிமொழி, ஆ.ராசா | கோப்புப் படம்
திமுக தலைவர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் 26-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பி்த்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த ஊழலில் கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தன் கிளை நிறுவனங்கள் வழியாக ரூ.200 கோடி லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த பணப் பரிமாற்றம் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வருவதால், அமலாக்கப் பிரிவு தனியாக வழக்குப் பதிவு செய்து, சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்பு, கடந்தவாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி, தயாளு அம்மாள், கருணாநிதி உறவினர் அமிர்தம், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா, குசேகான் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால், பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகிய 10 பேர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளனர்.
இதுதவிர, ஸ்வான் டெலிகாம், கலைஞர் டிவி, சினியுக் மீடியா, டிபி ரியால்டி உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு நீதிபதி சைனி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அமலாக்கப்பிரிவு இணை இயக்குநர் இந்தப் புகாரை பதிவு செய்துள்ளார். குற்றச்சாட்டு குறித்த விசாரணை விவரங்கள், விசாரணை யின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்கள், இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள் ளன. புகார் அளித்திருப்பவர் பொது ஊழியர் என்பதால், அவரிடம் வாக்கு மூலம் பெறத் தேவையில்லை. ஆவணங்களை பரிசீலித்ததில், குற்றச் சாட்டு குறித்து வழக்கு விசாரணையை தொடர போதிய ஆதாரங்கள் உள்ளது தெரியவருகிறது. தாக்கல் செய்யப் பட்டுள்ள ஆவணங்கள் திருப்தி அளிக்கின்றன. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ள அனைவரும் வரும் 26-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. புகார் அளித்த அமலாக்கப்பிரிவு அதிகாரி தினமும் வழக்கு விசாரணை யில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சைனி உத்தரவிட்டார்.

SITE MAINTAINED BY

S . சிவசிதம்பரம்