காவிரி நீரைப் பெற மத்திய அரசை நிர்பந்திப்பது அவசியம்
காவிரி நீரைப் பெற மத்திய அரசை தமிழக அரசு நிர்பந்தம் செய்வது அவசியம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் வே. துரைமாணிக்கம்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
காவிரியில் தமிழகத்துக்குக் கர்நாடக அரசு ஜூன் மாதம் முதல் இதுவரையில் 70 டி.எம்.சி. தண்ணீர்தான் வந்துள்ளது. நமக்குரிய மீதமுள்ள தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும்.
தமிழக முதல்வர் அனைத்து கட்சித் தலைவர்களையும், விவசாய சங்கத் தலைவர்களையும் அழைத்து சென்று பிரதமரைச் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமருக்குக் கடிதம் எழுதுவதைவிட நேரில் சென்று நிர்பந்தம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளின் தற்கொலை சாவைத் தடுக்க முடியாது.
டெல்டா மாவட்டங்களில் ஒரு போக சம்பா சாகுபடி மேற்கொள்ள வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட்டால்தான் கடைமடைக்குச் சென்றடையும்.
ஆனால், மழைக் குறைவு காரணமாகவும், தண்ணீர்ப் பற்றாக்குறையாலும் சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. முளைத்த பயிர்களும் கருகத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் முறைப் பாசனம் அமல்படுத்துவது சரியல்ல.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அளவில் மக்கள் சந்திப்பு பிரசார பேரியக்கம் வெள்ளிக்கிழமை (செப்.11) தொடங்கப்படவுள்ளது. இந்த பிரசாரம் செப். 17-ம் தேதி நிறைவடைய உள்ளதைத் தொடர்ந்து தஞ்சாவூரில் அன்று மாலை நிறைவு விழா நடைபெறவுள்ளது. இதில், சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலர் அதுல்குமார் அஞ்சான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்றார் துரைமாணிக்கம்.
சங்கத்தின் மாவட்டச் செயலர் பா. பாலசுந்தரம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.