இந்தியருக்கே பெருமை
By அ. பிச்சை
First Published : 25 January 2014 02:30 AM IST
இந்திய மக்களின் அறிவாற்றல், சட்ட நுணுக்கம், ஆழ்ந்த அனுபவம், அகன்ற தேசியப் பார்வை, தீர்க்க தரிசனம் ஆகிய அனைத்திற்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்வதுதான் நம் அரசியல் அமைப்புச் சட்டம். அது அமலுக்கு வந்த நாள்தான் 26 ஜனவரி 1950. அதனை உருவாக்கிய மாமேதைகளால்கூட, அன்றைய தினம் அவர்களது உணர்வை, உற்சாகத்தை, மகிழ்ச்சியை, எழுச்சியை அடக்கிக் கொள்ள முடியவில்லையாம்.
உலகிலேயே இதுதான் மிகப்பெரிய, மிகநீண்ட அரசியல் அமைப்புச் சட்டம். 395 ஷரத்துக்களும், 12 அட்டவணைகளும், 90,000 சொற்களும் கொண்ட அந்த வரைவுச் சட்டம் முழுவதும் கையால் எழுதப்பட்டது. ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் ஓவியங்களாக வரையப்பட்டிருந்தன. அதனை வரைந்து தந்தவர் சாந்திநிகேதனைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் நந்தலால் போஸ் என்பவர்.
இச்சபையில் 82 சதவீதத்தினர் காங்கிரஸ் உறுப்பினர்களே. ஆனால் முழுக்க காங்கிரசின் கூட்டம் என்ற தோற்றத்தைக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் கவனமாகச் செயல்பட்டது.
சமஸ்தானப் பிரதிநிதிகள், நிலச்சுவான்தார்கள் ஒருபுறம்; விவசாயிகளின் பிரதிநிதிகள், சோஷலிச சித்தாந்தவாதிகள் மறுபுறம். நாத்திகர்கள் ஒருபுறம்; மதவாதிகள் மறுபுறம்; அனைத்து மதம், சாதி, மொழி சார்ந்தவர்கள் இடம் பெற்றிருந்தனர். பெண் உறுப்பினர் ஒன்பது பேர். உண்மையில் இச்சபையில் பிரதிநிதித்துவம் பெறாத பிரிவினர் எவரும் இல்லை எனச் சொல்லலாம்.
இக்குழுவைப் பார்த்த பின்பு "அமையப் போகும் அரசியல் சட்டம் இந்துக்களின் ஆதிக்கத்தை இந்தியாவில் நிலை நிறுத்திவிடும்' என்று வெறுப்பை உமிழ்ந்தார் வின்ஸ்டன் சர்ச்சில். அதனைப் பொய்யாக்கிக் காட்டினார்கள் நம் தேசத் தலைவர்கள்.
அமெரிக்க வரலாற்று ஆசிரியர் டோரிஸ் கீன்ஸ் என்பவரோ இது போட்டியாளர்களின் குழு (பஉஅங ஞஊ தஐயஅகந) என்று கூறினார்.
1946இல் எழுதப்பட்ட ஸ்ரீலங்காவின் அரசியல் அமைப்புச் சட்டம், அயல் நாட்டு வல்லுனர்களால் எழுதப்பட்டது. 1948இல் ஜப்பான் நாட்டிற்காக ஒரு புதிய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்பட்டது. எழுதியது யார் தெரியுமா? 40 பேர் கொண்ட அமெரிக்கக் குழுவினர். ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த வரைவை, ஜப்பானிய வழக்கு மொழியில் மாற்றிக் கொண்டார்களாம் ஜப்பானியர்கள்.
இந்தியாவின் வரலாறு, பின்னணி, சமுதாயச் சூழல், ஏற்றத் தாழ்வுகள், பன்முகத்தன்மை - ஆகிய அனைத்தையும் புரிந்து கொண்ட இந்தியர்கள்தான் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தயார் செய்யவேண்டுமே தவிர, பிற நாட்டு வல்லுனர்கள் அல்ல என்பதில் நம் தலைவர்கள் உறுதியாக இருந்தார்கள்.
இதனை தயாரிப்பதற்கு சபை மூன்றாண்டு காலம் எடுத்துக் கொண்டது. மொத்தத்தில் சபை பதினொரு முறை கூடியது. 165 நாள்கள் சபையினர் விவாதித்தார்கள். விவாதங்களின் போது வேகம், விவேகம், கோபம், நகைச்சுவை ஆகிய அனைத்தும் இழையோடியதாம்.
அற்புதமான அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் அனைவருக்கும் பங்கு உண்டு. ஆனால் அவர்களில் 20 மேதைகளின் பங்களிப்பு, சட்ட வரைவுக்கு வடிவமும், வண்ணமும், ஏன் உயிரும் கொடுப்பதில் அதிகமாக இருந்ததாக அரசியல் விமர்சகர் கிரான்வில் ஆஸ்டின் கூறுகிறார்.
குறிப்பிட்டுச் சொல்வதென்றால், ஒவ்வொரு கூட்டத்தின் தொடக்கத்திலும், உணர்வுபூர்வமாகப் பேசி, அனைவரின் ஒருங்கிணைப்பு சக்தியாக (மசஐபஐசஎ ஊஞதஇஉ) விளங்கியவர் பண்டித நேரு.
சண்டையிடும் பிரிவினரை சமாதானம் செய்து வைத்தவர், சிறுபான்மைப் பிரிவினரின் உரிமை காக்க உரிய தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றச் செய்தவர் சர்தார் படேல்.
சபை உறுப்பினர்களிடையே கட்டுப்பாட்டை உறுதி செய்து, கண்ணியத்தை நிலை நாட்டி எல்லாரிடமும் நல்லவர் எனப் பெயர் எடுத்தவர் சபைத்தலைவர் ராஜேந்திர பிரசாத்.
சிந்தனைச் சிதறல்களுக்கு வண்ண வடிவம் கொடுத்து அதனை வழிகாட்டும் நூலாக, அரசியல் அமைப்புச் சட்டமாக ஆக்கித் தந்தவர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர்.
ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை அமைதியாகத் தந்தவர் அபுல் கலாம் ஆசாத்.
இவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்களில் குஜராத்தி பல்கலை வித்தகர் கே.எம். முன்ஷி, சென்னை மாகாண வழக்கறிஞர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கட்சி சாராத நிபுணர் என். கோபாலசாமி ஐயங்கார், இந்திய அரசின் சட்ட ஆலோசகர் ஐ.சி.எஸ் அதிகாரியாகவும் நீதிபதியாகவும் பணியாற்றிய பி.என். ராவ், கல்வியாளர் ஜெரோம் டி சௌஷா, ராவின் உதவியாளர் எஸ்.என். முகர்ஜி ஆகியோர் குறிப்பிடத்தவர்கள்.
பண்டைய மக்களாட்சி முறைப்படி, கிராமத்தை அடிப்படை அலகாக ஆட்சிமுறைக்கு வைத்துக்கொள்ளலாம் என காந்தியவாதிகள் வாதிட்டனர். "கிராமக் குடியரசுகள்தான் இந்தியாவைப் பாழாக்கின' என அம்பேத்கர் வாதாடினார். இறுதியில் தனி மனிதனை அடிப்படை அலகாக வைத்தே அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் முறையை ஏற்கலாமா என்பது பரிசீலிக்கப்பட்டது. ஆனால் ஏற்கப்படவில்லை. அதே போல் சுவிட்சர்லாந்து முறைப்படி அமைச்சர்களை மக்களே நேரடியாகத் தேர்வு செய்யும் முறையும் ஏற்கப்படவில்லை.
அரசியல் அமைப்பில் காந்தியம் இல்லாதது கண்டு மகாவீர் தியாகி மனம் வருந்தினார். வீணை அல்லது சிதார் இசையை விரும்புகிறோம். ஆனால் ஆங்கில பேண்டுவாத்திய இசையையே இன்று நாம் பெற்றிருக்கிறோம் என குற்றம் சாட்டினார் ஹனுமந்தய்யா.
ஆனால் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட்டன. நெறிகாட்டும் கொள்கைகள் வகுக்கப்பட்டன. தேசிய ஒற்றுமையை வளர்ப்பதாகவும், சமூகப் பொருளாதார மாற்றத்துக்கு உதவுவதாகவும் இந்திய அரசியல் சட்டம் அமைந்துள்ளது என்பதை பெரும்பான்மை உறுப்பினர்கள் உணர்ந்து சட்டத்தை ஏற்க முன்வந்தனர்.
24-01-1950 அன்று அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் கூட்டம் தொடங்கியது. அப்பொழுது அதன் செயலாளர் எச்.வி.ஆர். ஐயங்கார் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக பாபு ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிவித்தார். கரவொலி விண்ணைப் பிளந்தது. வந்திருந்தவர்களின் வாழ்த்துகளைப் பெற்றார் பிரசாத்.
அதன் பின் எழுந்து நின்று "ஜன கணமன நமது தேசிய கீதம், வந்தே மாதரம் அதற்கு சமமான இடத்தைப் பெறும்' என்று அறிவித்தார்.
அடுத்த நிகழ்வாக, அரசியல் சட்ட வரைவின் கையெழுத்துப் பிரதியில் கையெழுத்திட அனைத்து உறுப்பினர்களையும் அழைத்தார். முதல் கையெழுத்தை பண்டித நேரு போட்டார். அவரைத் தொடர்ந்து கையெழுத்து போட்டவர்கள், சென்னை மாகாணப் பிரதிநிதிகள். அனைவரும் கையெழுத்து போட்டு முடித்தபின்பு, தானும் தலைவர் என்ற முறையில், கையெழுத்து போட முடிவு செய்தார் பிரசாத்.
ஆனால் கடைசிக் கையெழுத்துக்குப் பின்னால் போடாமல், வரைவுச் சட்டத்தின் கடைசி வரிக்கும், நேருவின் கையெழுத்திற்கும் இடையில் இருந்த சிறிய இடத்தில் தன் கையெழுத்தை தெளிவில்லாமல் போட்டுக் கொண்டார்.
இரண்டு நாள்கள் கழித்து, 26-01-1950 அன்று, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், அமலுக்கு வந்தது. இதற்கிடையில் ராஷ்டிரபதி பவன் தர்பார் அரங்கில் தலைவர்கள் கூடுகிறார்கள். அப்பொழுது கவர்னர் ஜெனரல் சக்ரவர்த்தி ராசகோபாலாச்சாரியார் "இந்தியா இறையாண்மை மிக்க ஜனநாயகக் குடியரசு' (நர்ஸ்ங்ழ்ண்ஞ்ய் ஈங்ம்ர்ஸ்ரீழ்ஹற்ண்ஸ்ரீ தங்ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ) என அறிவிக்கிறார். அதன்பின், ராஜாஜி அமர்ந்திருந்த நாற்காலியில் ராஜேந்திர பிரசாத் அமர்கிறார். தலைமை நீதிபதி கனியா, ராஜேந்திர பிரசாதுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
மாறுபாடுகளும், வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்தது இந்தியா. அதற்கென்று ஒரு தேசிய லட்சியத்தை வகுத்துக் கொடுத்து, அதற்கு ஒரு வடிவம் கொடுத்து, அதனைச் சாதிக்க ஒரு நிறுவன அமைப்பை உருவாக்கியது இந்திய அரசியல் அமைபுச் சட்டம். இது ஒரு மாபெரும் சாதனை. இச்சாதனைக்குரிய பெருமை யாரைச் சாரும்? பெருமை இந்தியருக்கே என்கிறார், அமெரிக்க நாட்டு அரசியல் மேதை கிரான்வில் ஆஸ்டின்.
கட்டுரையாளர்: மாற்றுத் திறனாளிகள், மறுவாழ்வுத்துறை இயக்குநர் (ஓய்வு)